சென்னை: சென்னையை கலக்கிய, பிரபல ‘ஏ பிளஸ்’ ரவுடி ‘சிடி’ மணி துப்பாக்கி முனையில் சேலத்தில் கைது செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு வேட்டையை போலீஸார் தீவிரப்படுத்தினர்.
குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், வட சென்னையை கலக்கிய காக்காதோப்பு பாலாஜி ஆகிய 2 ரவுடிகள் அடுத்தடுத்து போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். மேலும், கடந்த இரண்டரை மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியும், நண்பருமான ‘ஏ பிளஸ்’ வகையை சேர்ந்த ரவுடி சிடி மணியை(42) போலீஸார் தேடி வந்தனர். கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், மாமூல் வசூலிப்பு, வீடு, நிலம் அபகரிப்பு என பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய சிடி மணி சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, பின்பு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார்.
அவர் சேலத்தில் பதுங்கி இருப்பதை அறிந்த சென்னை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு விரைந்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர், அவர் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து சி.டி மணியின் தந்தை பார்த்த சாரதி கூறும்போது, ‘`சேலத்தில் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் சி.டி. மணி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். வழக்குகளில் தொடர்ந்து நீதிமன்றங்களில் ஆஜராகி வரும் நிலையில் அத்துமீறி வீட்டில் நுழைந்து போலீஸார் மகனை கைது செய்துள்ளனர். பல ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு வருவதால் எனது மகன் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்'’ என்றார்.
33 குற்ற வழக்குகள்: ரவுடி மணிகண்டன் என்ற சிடி (CD) மணி சென்னை தேனாம்பேட்டை, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர். 8 கொலை வழக்குகள் உட்பட 33 குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர். தி.நகர் பஜாரில் சிடி கடை வைத்திருந்ததால் சிடி மணி என்ற அடைமொழி பெயர் வந்துள்ளது. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
தி.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, இசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் கட்டிட உரிமையாளரிடம் தனது கூட்டாளிகள் மூலம் மாமூல் பெற்றும் வந்துள்ளார். சிடி மணியின் குற்ற பின்னணி தொடர்ந்து கொண்டே இருந்தது. அதேநேரம் அவருக்கு எதிரிகளும் அதிகரித்ததால், தனது பாதுகாப்பு கருதி ‘புல்லட் புரூப்’ அடங்கிய சொகுசு காரில் வலம் வந்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.
காக்கா தோப்பு பாலாஜியும், சிடி மணியும் 2020-ல் சென்னை அண்ணா சாலையில் காரில் சென்றபோது, பிரபல ரவுடியான எதிர் தரப்பைச் சேர்ந்த சம்பவம் செந்தில் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது. இதில் சிடி மணியும் காக்கா தோப்பு பாலாஜியும் உயிர் தப்பினர். இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட சம்பவம் செந்தில் தற்போதுவரை தலைமறைவாக உள்ளார். அவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்திலும் போலீஸார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.