புழல் சிறையில் இரு நைஜீரிய பெண் கைதிகள் இடையே மோதல்


செங்குன்றம்: புழல் மத்திய சிறையில், ஒரு இளைஞரை இருவர் காதலித்து வந்தது தொடர்பாக நைஜீரிய நாட்டை சேர்ந்த இரு பெண் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் படுகாயமடைந்த ஒரு பெண் கைதி சென்னை - ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் பிரிவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

இதில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்களான மோனிகா( 32 ), கிளாரக்கா( 33) ஆகிய இருவரும் போதை பொருட்கள் கடத்தல் வழக்குத் தொடர்பாக கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில், மோனிகாவும், கிளாரக்காவும் புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவில் உள்ள நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இச்சூழலில், பார்வையாளர் சந்திப்பு நேரத்தில், சிறைத் துறை அனுமதியுடன், விசாரணை பிரிவில் உள்ள நைஜீரியா காதலருடன் கிளாரக்கா, வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசியுள்ளார். பிறகு, அவர் அறைக்கு திரும்பினார். இதையறிந்த மோனிகா, ‘என் காதலனுடன் நீ எப்படி பேசலாம்’ என்று கூறி கிளாரக்காவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த தகராறு முற்றியதால், மோனிகா மற்றும் கிளாரக்கா இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், மோனிகா, கிளாரக்காவின் உதட்டை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த கிளாரக்காவை சிறைத் துறையினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, கிளாரக்கா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x