மின்வேலியில் சிக்கி தந்தை - மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு: திருப்பத்தூர் அருகே சோகம்


திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற தந்தை - மகன் உட்பட 3 பேர் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, நிலத்தை குத்தகைக்கு எடுத்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியை யொட்டியுள்ள காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த நீதி (48) என்பவர் குத்தகையை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

மலைப்பகுதியை யொட்டி விவசாயம் நிலம் இருப்பதால் வனவிலங்குகள் நிலத்துக்கு வருவதை தடுக்க சட்ட விரோதமாக விவசாய நிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் பகுதியை சேர்ந்த சிங்காரம் (40). இவரது மகன் லோகேஷ் (14), பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த கரிபிரான் (60) ஆகிய மூன்று பேர் நேற்றிரவு (21ம் தேதி) ஏலகிரி மலை பகுதிக்கு வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றனர்.

பிறகு, அவர்கள் 3 பேரும் இன்று காலை வீடு திரும்பிய போது முருகன் என்பவருடைய நிலத்தின் வழியாக வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த மின்வேலி சிக்கி 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் விவசாய நிலத்தில் இருந்ததை யாரும் கவனிக்கவில்லை.

இன்று காலை நிலத்தின் வழியாக வேலைக்கு சென்ற சிலர் 3 பேர் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனே, ஊர் மக்கள் அங்கு திரண்டனர். இது குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், குரிசிலாப்பட்டு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிறகு, மின்வாரிய ஊழியர்கள் வந்த அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, விவசாய நிலத்தில் உயிரிழந்து தந்தை - மகன் உட்பட 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விலங்குகளை வேட்டையாட சிங்காரம் கொண்டு சென்ற நாட்டு துப்பாக்கியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து குரிசிலாப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நீதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விலங்குகளை வேட்டையாட சென்ற தந்தை - மகன் உட்பட 3 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் இன்று சலசலப்பை ஏற்படுத்தியது.

x