சென்னை அடுத்த மதுரவாயல் அருகே காவலர் தாக்கியதில் கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அந்த ஓட்டுநரின் உறவினர்கள் மதுரவாயல் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமார். இவர் நேற்று முன்தினம் இரவு வானகரம் சர்வீஸ் சாலையில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டு நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ரிஸ்வான் அருகில் சென்று கார் ஓட்டுநரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த காவலர், டிரைவர் ராஜ்குமாரின் நெஞ்சில் ஓங்கி மிதித்ததாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புகாரின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், சம்பவ இடத்தில் மயங்கிக் கிடந்த கார் ஓட்டுநரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஓட்டுநர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஓட்டுநர் ராஜ்குமார், மாரடைப்பால் இறந்தாகக் கூறி வழக்குப் பதிவு ஏதும் செய்யாமல் விட்டிருக்கிறார்கள். முதலில் புகார் தெரிவித்த பெண்ணையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவலர் ரிஸ்வானையும் சேர்த்து மூன்று பேரிடம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓட்டுநர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் இன்று மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் வாசிக்கலாமே...