அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் அவருக்கு நண்பனாக நடித்த நடிகர் ஜெகதீஷ் திடீரென போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’புஷ்பா’. தெலுங்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜூன் நண்பனாக கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெகதீஷ். இவர் துணை நடிகை ஒருவர், தனிமையில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி துணை நடிகையை மிரட்டி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த நடிகை நவம்பர் 29ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஜெகதீஷ் மீது புகார் அளிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக போலீஸார் நடிகர் ஜெகதீஷைத் தேடி வந்தனர். இறுதியாக நேற்று பஞ்சகுட்டா போலீசாரால் நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் புஷ்பா 2 படத்திலும் ஜெகதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் நடிக்க வேண்டிய பகுதிகள் பாதி படமாக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.