திருப்பூர்: கடன் தொகையை முழுமையாக செலுத்திய பின்னரும், அடமானம் வைக்கப்பட்ட நிலப் பத்திரத்தை திருப்பூரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் தர தாமதிப்பதாக கூறி, கூலி தொழிலாளி குடும்பத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் செண்பகப் புதூரை சேர்ந்த தம்பதி கனகராஜ், மல்லிகா கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகன் கணேஷ் (25), தொழில் செய்வதற்காக திருப்பூர் அனுப்பர் பாளையத்திலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிலப் பத்திரத்தை அடமானமாக வைத்து, ரூ.3 லட்சத்து 51 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். 6 மாதங்களாக மாதாந்திர தவணையாக ரூ.11 ஆயிரத்து 720 செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆக.16ம் தேதி மொத்த கடனான ரூ. 3 லட்சத்து 35 ஆயிரத்தை கணேஷ் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து, அடமானம் வைக்கப்பட்ட நிலப் பத்திரம் 2 நாட்களில் வழங்கப்படும் என்று, தனியார் நிதி நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதத்துக்கும் மேலாகியும் நிலப் பத்திரம் வழங்காமல் இருப்பதை கண்டித்து, கணேஷும், அவரது தாயார் மல்லிகாவும், சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு அனுப்பர் பாளையம் போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், தனியார் வங்கித் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கணேஷ் பெற்றிருந்த ஆவணங்களை சரிபார்த்த போலீஸார், ஒரு மாதத்துக்கும் மேல் நிலப் பத்திரம் அளிக்க ஏன் தாமதப்படுத்துகிறது என கேள்வி எழுப்பினர். அப்போது, தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், அங்கு உரிய வாடகை செலுத்தாததால் அறை பூட்டப்பட்டதாகவும், தற்போது பெரியார் காலனியில் தனியார் நிதி நிறுவனம் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆவணங்களை விடுவிடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த கணேஷ், மல்லிகா ஆகியோரை, அனுப்பர்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் பெற்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.