சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்துக்கள் மனதை புண்படும்படி பேசியதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில செயலாளர் ஏ.அஸ்வத்தாமன் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பற்றி பியூஸ் மானுஷ் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பார்த்தேன். அதில் இந்துக்களை பார்த்து, ‘100 கோடி பேருக்கு மேல் திருப்பதி கோயிலுக்கு சென்றிருப்பார்கள். மாட்டு இறைச்சி நல்லா சாப்டீர்களா? நல்லா இருந்ததா? பெருமாள் நல்லா கொடுத்தாரா? என பேசியிருக்கிறார்.
நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடந்ததாக சொல்லப்பட்ட, அதுவும், கன்றுக்குட்டி திருடப்பட்ட ஒரு சம்பவத்தில் நடந்த வன்முறையை மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் நடந்த வன்முறை என்று திசை திருப்பி, அதை வைத்து 100 கோடி மக்களின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தியுள்ளார். ஏற்கெனவே இந்துக்கள் பலரும் திருப்பதி லட்டு பிரசாதத்தில் நடந்த கலப்படம் பற்றி மனம் கலங்கியுள்ள நிலையில், இது அவர்கள் மனதை மேலும் புண்படுத்தி உள்ளது.
இவரை தொடர்ந்து, மேலும் பலரும் இந்துக்கள் மனதை புண்படுத்தும் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நபர் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. எனவே, மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும், பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் பேசிய பியூஸ் மானுஷ் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.