கிருஷ்ணகிரி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட்டு


கிருஷ்ணகிரி: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடப்பட்டது தொடர்பாக கிருஷ்ணகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி-குப்பம் நெடுஞ்சாலையில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் எதிரே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது.இங்கு ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை நேற்று காலை பார்த்த அப்பகுதி மக்கள், போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏடிஎம் மையத்துக்கு வந்த மர்ம நபர்கள், மையத்தின் வெளியே மற்றும் உள்ளே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மீதும் கருப்பு வண்ணத்தை பூசி, காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் ரூ.12 லட்சம் நிரப்பி உள்ளனர். இயந்திரத்தில் ஏற்கெனவே இருந்த இருப்பு, வாடிக்கையாளர்கள் எடுத்த தொகை உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ரூ.23 லட்சம் திருடப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

எனினும், வங்கி சார்பில் முழுமையான தகவல்கள் அளிக்கப்பட்ட பின்னரே, திருடப்பட்ட பணம் எவ்வளவு என்பது தெரியவரும்" என்றனர்.

x