சமூக வலைதளத்தை ரவுடியிசத்துக்கு பயன்படுத்தாமல் இருக்க கண்காணிப்பு: கோவை மாநகர காவல் ஆணையர்


மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன்

கோவை: “சரித்திர குற்றப் பின்னணி உள்ளவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம்.சமூகவலைதளத்தை ரவுடியிசம், குற்றச் சம்பவங்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என கோவையில் இன்று (செப்.21) மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை மாநகர காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில், காவல்துறை குடும்பத்தினர் பங்கேற்ற யோகா பயிற்சி நிறைவு விழா இன்று (செப்.21) நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, யோகா முத்திரைகளை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் முன்பு செய்து காட்டினர். அதைத் தொடர்ந்து, அவர் பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

அதன் பின்னர், காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “காவலர்களின் குடும்பப் பெண்களின் கோரிக்கைகளை ஏற்று 48 நாட்கள் யோகா பயிற்சி ஏற்பாடு செய்து இன்று நிறைவடைந்துள்ளது. பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இப்பயிற்சியை ஏற்பாடு செய்து கொடுத்தோம். ரவுடி ஆல்வின் என்பவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரேஸ்கோர்ஸ் போலீஸ் எல்லையில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆல்வின் முக்கிய குற்றவாளியாவார். தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் தேடி வந்தனர். கொடிசியா மைதானம் அருகே பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்து தனிப்படையினர் பிடிக்க முயன்ற போது, காவலரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சரித்திர குற்றப் பின்னணி உள்ளவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரவுடிகள் நீதிமன்றத்துக்கு வரும் போது, அங்கேயும் குற்றங்கள் நடக்காமல் இருக்க அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் எதிர்தரப்பினர் செயல்பட்டு வந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதுகுறித்த தகவலை சேகரித்து பழிக்கு பழி என்ற கொலையை தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆல்வின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பழிக்கு பழி வாங்கும் கொலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்: சமூகவலைதளத்தை ரவுடியிசம், குற்றச் சம்பவங்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். குற்றப் பின்னணி உள்ள 600-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். ரவுடிகள் எந்த மாவட்டமாக, எந்த மாநிலமாக இருந்தாலும் சரி அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பர். சட்டத்தை பாதுகாக்க துப்பாக்கி பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. பயன்படுத்துவதற்காக துப்பாக்கி எடுத்துச் செல்லப்படுவதில்லை. தேவைப்படும்போது, மற்றவர்களின் பாதுகாப்புக்காகவும், காவலர்களின் தற்காப்புக்காகவும் துப்பாக்கி பயன்படுத்துகின்றது” என்றார். இந்நிகழ்வின் போது, துணை ஆணையர் சரவணக்குமார், உதவி ஆணையர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x