கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் வீடுகளில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுகிறது, இதனால் இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகும். இதனை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் இரா.ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய காவல் உட்கோட்ட பகுதிகளில் உள்ள டிஎஸ்பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் இன்று ஒரே சமயத்தில் கஞ்சா வியாபாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
போலீஸார் வருவதை அறிந்த கஞ்சா வியாபாரிகள் தலைமறைவாகினர். மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. சிதம்பரத்தில் டிஎஸ்பி-யான லாமேக் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீஸார் சிதம்பரம் நகர பகுதியில் உடைப்பு சிவா, டீக்கடை அரவிந்த், அரி ஆகியோர் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதுபோல் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் கஞ்சா சோதனைகளில் ஈடுபட்டனர்.