நியோமேக்ஸ் வழக்கில் ரூ.466.79 கோடி மோசடி: விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கூடாது என ஐகோர்ட் கிளையில் மனு


மதுரை: நியோமேக்ஸ் வழக்கில் இதுவரை 2,585 பேரிடம் ரூ .466.79 கோடி மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கூடாது என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிவகாசி காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், 'மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு 'நியோமேக்ஸ்' பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், நெல்லை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும். நிலம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்தனர்.

இதை நம்பி பலர் பல ஆயிம் கோடி ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுரையைச் சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்தனர். இவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.

நியோமேக்ஸ் மோசடி வழக்கு விசாரணை சரியான திசையில் செல்லவில்லை. விசாரணை தாமதமாகி வருகிறது. இதனால் நியோ மேக்ஸ் மோசடி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே. முரளி சங்கர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி-யான டி.எம்.மனிஷா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முதலில் 2009-ம் ஆண்டில் க்ரீன் வெல்த் அக்ரோ இந்தியா லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். அதன் பின்னர் தலைமையகத்தை மதுரைக்கு மாற்றி நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றினர்.

பின்னர் பல்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு பெயரில் நிறுவனங்கள் தொடங்கி அந்த நிறுவனங்கள் பெயரில் முதலீட்டாளர்களிடம் பெரும் தொகை வசூலித்துள்ளனர். மக்களிடம் வசூலித்த பணத்தில் முக்கிய நகரங்களில் பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் சொத்துக்களை வாங்கி உள்ளனர். நியோமேக்ஸ் நிறுவனத்தினர் பல்வேறு பெயர்களில் 110 நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர். அதில் 50 நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளன.

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க தொழில்நுட்ப ரீதியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களை தங்களுக்குள் மாற்றிக்கொண்டுள்ளனர். நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 57 இடங்களில், குறிப்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில், நீதிமன்ற அனுமதிபெற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ரூ.1,51,04,212 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 34 சொகுசு கார்கள், 2 இரு சக்கர வாகனங்கள், 101 டிஜிட்டல் சான்றுகள், 1,480 அசல் பதிவு ஆவணங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் தொடர்பான அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,585 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இப்புகாரின் படி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் ரூ.466,79,68,049 வைப்பு தொகை பெறப்பட்டு மோசடி நடந்துள்ளது.

நியோமேக்ஸ் இயக்குநர்களுக்கு சொந்தமான ரூ.172,89,81,389 மதிப்புள்ள சொத்துகள் தமிழ்நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டு, பட்டா, சிட்டா, அடங்கல், உண்மைத்தன்மை போன்ற சொத்து ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைச் சேகரித்து உள்ளோம், இந்தச் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் சுமார் ரூ.11,56,46,000 மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அரசாணையை அரசு ஏற்கெனவே பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 12 முகவர்களில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை சரியான முறையில் நடைபெற்று வருகிறது. ஆகவே, விசாரணையை வேறு அமைப்புக்கு மற்ற தேவையில்லை.

விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றினால், முதலீட்டாளர்கள் மேலும் பாதிக்கப்படுவர். அவர்கள் முதலீட்டு தொகையை பெறுவதில் மேலும் தாமதம் ஏற்படும். எனவே விசாரணையை மாற்றக் கோரிய மனுவை நிராகரிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சிபிஐ தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

x