திருப்பூரில் தொடர்ந்து வீடுகளில் திருடிய 4 பேர் கும்பல் கைது: மாநிலம் முழுவதும் 75+ வழக்குகளில் தொடர்பு


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து வீடுகளில் திருடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் இன்று (செப். 21) கைது செய்தனர். விசாரணையில், இந்தக் கும்பல் தமிழ்நாடு முழுவதும் 75-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், உடுமலை காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆக. 27-ம் தேதி முதல் செப். 1-ம் தேதி வரை, பூட்டியிருந்த வீடுகளை தொடர்ந்து நோட்டமிட்டு 16 வீடுகளை உடைத்து 45 பவுன் நகை, ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் ரொக்கம், 30 பட்டு சேலைகள், தலா 2 வெள்ளி மற்றும் வெண்கல குத்துவிளக்குகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக மேற்கண்ட காவல் நிலையங்களில் மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொள்ளையர்களைப் பிடிக்க மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் உத்தரவின்படி, கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் ஆலோசனையின்படி, எனது மேற்பார்வையில், 3 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து திருடப்பட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்ததில், சத்தீஸ்கர் மாநிலம் சத்ரபதி சிவாஜி ஜெகதல்பூர் தீட்கரகோட்டையை சேர்ந்த முருகன் சிவகுரு (45), கள்ளக்குறிச்சி அம்மையாகரத்தைச் சேர்ந்த ராஜா (40), தியாகதுர்கத்தைச் சேர்ந்த சுரேஷ் (34) மற்றும் சித்தாலூரைச் சேர்ந்த தங்கராஜ் (55) ஆகியோர் தான் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது எனத் தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த தனிப்படை போலீஸார், அவர்களிடமிருந்து 32 பவுன் நகை, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்தில் 5 வழக்குகளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 வழக்கும் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள், 25 வழக்குகளில் 97 பவுன் நகைகள், ரூ.8 லட்சத்து 71 ஆயிரம் ரொக்கம், 5 இருசக்கர வாகனங்களை திருடியிருப்பது கண்டறியப்பட்டது.

நீதிமன்றத்தால் ரிமாண்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நால்வரையும் மீண்டும் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக்கு எடுத்து விசாரிக்கப்படும். இவர்களில் ராஜா மற்றும் தங்கராஜ் மீது 19 வழக்குகளும், சுரேஷ் மீது 15 வழக்குகளும், முருகன் சிவகுரு மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன. இந்தக் கும்பல் தமிழ்நாடு முழுவதும் 75-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளைக் கும்பலை பிடித்த காவல் ஆய்வாளர்கள் சோமசுந்தரம், கோபாலகிருஷ்ணன், விவேகானந்தன் ஆகியோர் கொண்ட குழுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x