காதல் கணவரை தேடி மாமியார் வீட்டுக்கு வந்த ராணிப்பேட்டை இளம்பெண்!


காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி ராணிப்பேட்டை காரையில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து நேற்று முறையிட்ட இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்திய சமூகநலத்துறை அதிகாரிகள்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காரையில் உள்ள காதல் கணவரை தன்னுடன் குடும்ப நடத்துவதற்கு அழைத்து செல்வதற்காக மாமியார் வீட்டுக்கு வந்த இளம்பெண்ணை, கணவரின் குடும்பத்தினர் ஏற்க மறுப்பு தெரிவித்து தகராறு செய்ததால் நேற்று சலசலப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாழம் ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் சாயா தேவி (24). இவர், சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அதே மருத்துவமனையில் ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்த ஹென்றி மார்ட்டின் என்பவர் பணிபுரிந்து வந்தார். இருவரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இருவருக்குமிடையே இருந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இதில், சாயாதேவி கர்ப்பமாகி உள்ளார். இதுகுறித்து அவர், தனது காதலனிடம் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் திருமணம் செய்ய இயலாது. கருவை கலைக்குமாறு அவர், இளம்பெண்ணிடம் தெரிவித்தார். காதலன் கூறியதை நம்பி சாயாதேவி கருவையும் கலைத்துள்ளார். பின்னர், திருமணம் செய்யாமல் ஹென்றிமார்ட்டின் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுதொடர்பாக இளம்பெண் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். காவல்துறையின் பேச்சு வார்த்தைக்கு பிறகு 6 மாதங்கள் கழித்து ஹென்றி மார்ட்டின் தனது காதலியை, கடந்த ஏப்ரல் 27-ம் தேதி திருமணம் செய்துள்ளார். காதல் தம்பதியர் வட பழனியில் உள்ள வாடகை வீட்டில் சில நாட்கள் தங்கியுள்ளனர். அதன்பிறகு வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டுச்சென்ற ஹென்றிமார்ட்டின், மீண்டும் வீடு திரும்ப வில்லை. ராணிப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். சாயாதேவி தனது கணவரை கைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும் முறையான தகவல் அளிக்கவில்லை என கூறப் படுகிறது.

இந்நிலையில், சாயாதேவி காதல் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ அனுப்பி வைக்குமாறு, காரையில் உள்ள அவரது மாமியார் வீட்டுக்கு வந்து முறையிட்டார். ஆனால், சாயாதேவியை, ஹென்றிமார்ட்டினின் குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் வசை பாடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல்துறையினர் மற்றும் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் அங்கு சென்று சாயாதேவியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சமூகநலத் துறையினர் அவரை வாலாஜா அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்துக்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தங்க வைத்துள்ளனர். இது தொடர்பாக இரு தரப் பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

x