2 சிறுவர்கள் கொலை - ரூ.14 ஆயிரம் கடனுக்காக ஒப்பந்ததாரர் வெறிச்செயல்; குடியாத்தம் அருகே பயங்கரம்!


உயிரிழந்த தர்ஷன், யோகித்.

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றியம் வடிவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி யோகராஜ் (34). இவரது மனைவி வினிதா (29). இவர்களது மகன்கள் யோகித் (5), தர்ஷன் (4). அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யோகித் 1-ம் வகுப்பும், தர்ஷன் யுகேஜியும் படித்து வந்தனர்.

இந்நிலையில், யோகராஜின் நண்பரான வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சிங்கில்பாடி ஏரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் வசந்த்குமார் (35) என்பவர் யோகராஜ் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் யோகராஜ் வீட்டுக்கு வந்த வசந்த்குமார் அங்கு விளையாடி கொண்டிருந்த யோகித் மற்றும் தர்ஷன் ஆகிய 2 பேரை யும் அருகேயுள்ள கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

பிறகு, நீண்ட நேரமாகியும் வசந்த் குமார் குழந்தைகளுடன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த யோக ராஜ் தனது நண்பர் வசந்த்குமாரின் கைபேசிக்கு தொடர்பு கொள்ள முயன்றபோது, அது அணைத்து வைக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது.

தீவிர வாகன சோதனை: இதனால், அதிர்ச்சியடைந்த யோகராஜ், வினிதா மற்றும் உறவினர்கள் குழந்தைகளை பல இடங்களில் தேடினர். எங்குமே குழந்தைகள் கிடைக்காததால் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் யோகராஜ் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்ட குழந்தைகளை தேட தொடங்கினர். ஆம்பூர் - குடி யாத்தம் சாலையில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இரண்டு குழந் தைகள் கடத்தப்பட்டதாக வெளி யான தகவலை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆம்பூருக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

கைதான வசந்த்குமார்

உடனே, வசந்த்குமாரின் கைபேசி சிம்கார்டு சிக்னலை ‘டிராக்’ செய்தபோது அது குடியாத்தம் அடுத்த சிங்கில் பாடி ஏரிபட்டி கிராமத்தை காட்டியது. உடனே, ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் குடியாத்தம் காவல் துறையினர் உதவியுடன் சிங்கில்பாடி ஏரிபட்டி கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வசந்த்குமார் 2 குழந்தைகளையும் ஏரிபட்டி கிராமத்தையொட்டியுள்ள கோயில் பின்புறம் அழைத்து சென்றது தெரியவந்தது.

உடனே, காவல் துறையினர் கோயில் பின்புறம் சென்று பார்த்த போது அங்கு யோகித் மற்றும் தர்ஷன் ஆகிய 2 சிறுவர்களும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதைக்கண்ட யோகராஜ், வினிதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே, குழந்தைகளின் உடல்களை மீட்ட காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, தலைமறைவான வசந்த்குமாரை தேடிய போது, அவர் அதேபகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே, அங்கு சென்ற ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வசந்த்குமாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

ரூ.14 ஆயிரம் கடன்... இதில், காவல் துறையினரிடம் வசந்த்குமார் கூறியது, ‘‘யோக ராஜ் - வசந்த்குமார் ஆகிய 2 பேரும் நண்பர்கள். இதில், வசந்த்குமாரிடம் கட்டிட மேஸ்திரி யான யோகராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், கொடுத்த கடன் தொகையை திருப்பி கேட்டபோது யோகராஜ் காலம் கடத்தி வந்ததால் அவரது 2 மகன்களை கடத்தி கொலை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வசந்த்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் கூறிய தகவல்கள் உண்மை தானா? 2 குழந்தைகளின் கொலைக்கு 14 ஆயிரம் ரூபாய்தான் காரணமா?” என விசாரணை நடத்தி வருகின்றனர்.

x