ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி வசூர் ராஜா கும்பல் - வேலூரில் தொழிலாளி தற்கொலை


வேலூர்: வேலூரில் ரூ.30 லட்சம் பணம் கேட்டு ரவுடி வசூர் ராஜாவின் கும்பல் மிரட்டியதால் பழைய கட்டிடங்களை இடிக்கும் தொழில் செய்து வந்தவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, ரவுடி வசூர் ராஜாவின் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சத்துவாச்சாரி காவல் நிலையத்தை நேற்று உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (47). இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர், பழைய கட்டிடங்களை இடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவரை தொடர்புகொண்ட மர்ம கும்பல் ஒன்று ‘அலமேலுரங்காபுரம் பகுதியில் ஒரு வீட்டை இடிக்க வேண்டும்’ என கூறியுள்ளனர். அந்த வீட்டை பார்க்க தங்கராஜ் நேற்று முன்தினம் சென்றபோது, கோவை மத்திய சிறையில் உள்ள ரவுடி வசூர் ராஜாவின் உறவினர் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்து வீட்டுக்கு வந்த அவர் ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவரங்கள் எதையும் வீட்டில் கூறவில்லை. தனக்கு உடல் வலியாக இருப்பதாக கூறியவர் வீட்டில் இருந்தவர்களிடம் தைலம் கேட்டுள்ளார். பின்னர், அவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

பின்னர், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள மலையடிவாரம் முனீஸ்வரன் கோயில் அருகேயுள்ள மரத்தில் தங்கராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான தகவலின்பேரில் சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ரவுடி வசூர் ராஜாவின் உறவினர் ஒருவர் தலைமையிலான ஒரு கும்பல் ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டி யதாலேயே தங்கராஜ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, தங்கராஜ் தற்கொலைக்கு காரணமான ரவுடி வசூர் ராஜா கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சத்துவாச்சாரி காவல் நிலையத்தை நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட உறவினர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம், ஆய்வாளர் லதா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, தங்கராஜ் உயிரிழப் புக்கு கராணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையேற்று, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், தங்கராஜ் தற்கொலையில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தேடி வரு கின்றனர்.

x