கும்பகோணத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் பலத்த காயம்!


கும்பகோணம்: பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை புறவழிச்சாலையில் இன்று காலையில் சென்னையில் இருந்து தஞ்சாவூரை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமுற்றனர்.

சென்னையில் இருந்து நேற்று இரவு, அரசு விரைவுப்பேருந்து ஒன்று தஞ்சாவூருக்கு 15 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் பேருந்தை ஓட்டி சென்றார். தஞ்சாவூர், ஜெபமாலைபுரத்தைச் சேர்ந்த ம.வினோத் (40) நடத்துநராக பணியில் இருந்தார். பேருந்து இன்று காலையில் அய்யம்பேட்டை புறவழிச்சாலை திருப்பத்தில் திரும்பிய போது, எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணித்த தஞ்சாவூர் காசாவளநாடு, கீழத்தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (34) மற்றும் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதில், ராஜசேகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயமடைந்த ஓட்டுநர் பழனிவேலு, அய்யம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x