90-க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்களில் தொடர்புடைய மோசடி இளைஞர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது


சென்னை: தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா நகரைச் சேர்ந்தவர் எருகல சுதர்சன்(44). இவர், முதலீடு தொடர்பான நிறுவனங்களை இணையதளத்தில் தேடினார். அப்போது, ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, குறுகிய காலத்தில் முதலீட்டு பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டது.

அதை நம்பி, முதலில் சிறிய தொகை முதலீடு செய்தார். அந்த தொகை இரட்டிப்பு ஆனது போல தகவல் அவருக்கு கிடைத்தது. அதை நம்பி, அடுத்தடுத்து முதலீடு செய்தார். அந்த வகையில் ரூ.16 லட்சம் வரை முதலீடு செய்தார். அதற்கான லாபத்தொகை வந்தது போல வங்கி கணக்கில் தகவல் வந்தது. இதை பரிசோதித்தபோது, அது போலி தகவல் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, வாரங்கல் சைபர் குற்றப்பிரிவு போலீஸில் அவர் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தபோது, பிரதீப் வைஷ்ணவ்(24) என்ற இளைஞர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர், நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட சைபர் மோசடி வழக்குகளில் தொடர்புடைய நபர் என்பதும், ரூ.1.50 கோடி வரை மோசடி செய்திருப்பதும், தற்போது, சென்னை சென்ட்ரல் அருகே பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

சென்ட்ரல் ஆர்பிஎஃப் ஆய்வாளர் மதுசூதனரெட்டி தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு அவரைச் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், பல்வேறு பற்று, வரவு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தகவல் அறிந்து சென்னை வந்த வாரங்கல் சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.

x