இன்ஸ்டா மூலம் ரூ.77 லட்சம் மோசடி: 4 பேரை கைது செய்தது திருப்பூர் போலீஸ்


திருப்பூர்: இன்ஸ்டாகிராமில் டிரேடிங் கணக்கு துவங்கி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக கூறி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று (செப்.20) 4 பேர் கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "சமூக வலைதளமான, இன்ஸ்டா கிராமில் டிரேடிங் சம்பந்தமான விளம்பரத்தை பார்த்ததாகவும், அதனை நம்பி அவர்களை தொடர்பு கொண்டபோது, வாட்ஸ்-அப் தன்னை இணைத்துவிட்டதாகவும், அதில் சில லிங்குகளை அனுப்பி வைத்தனர்.

அவற்றை திறந்த நிலையில், அங்கு பரிந்துரைக்கப்பட்ட டிரேடிங்கில் பல தவணைகளில் ரூ.77 லட்சத்து 55 ஆயிரத்து 545ஐ முதலீடு செய்தேன். பிறகு அவர்கள் கூறியது போல், எனக்கு எந்த அதிக லாபமும் கிடைக்கவில்லை. இதையடுத்து நான் ஏமாற்றப்படுவதை உணர்ந்தேன். தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

சென்னை சேப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இவ்வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அர்ஷாத் (23), சென்னையை சேர்ந்த சேக் முகமது (26), தவ்பிக் (28) மற்றும் கேரளாவைச் சேர்ந்த அப்துல் முனாஸ் (23) ஆகிய 4 பேரை இன்று (செப்.20) கைது செய்தனர். இவர்கள் பொதுமக்களிடம் வங்கி கணக்கை உருவாக்கி அதனை பெற்று குற்றச்செயலுக்கு பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. வங்கி கணக்கை உருவாக்கிக் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.

சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, "பொதுமக்களிடம் வங்கி கணக்குகளை போலியாக உருவாக்கி தருமாறு, யாராவது தொடர்பு கொண்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இதேபோல் டெலி கிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் டாஸ்க் முறையில் ஷேர் மார்க்கெட் முதலீடு செய்து, குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறிவரும் எவ்வித குறுஞ் செய்திகள், தொலைபேசிகளை நம்பி அதில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்" என்று சைபர் கிரைம் போலீஸார் கூறியுள்ளனர்.

x