கண்ணமங்கலம் அருகே பெண் கொலை - போலி சாமியார் கைது


கைது செய்யப்பட்ட தஞ்சன்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே ஏரியில் கழுத்து அறுக்கப்பட்டு நடைபெற்ற பெண் கொலை வழக்கில் போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள பெரியேரியில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நேற்று (செப்.19) சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய கண்ணமங்கலம் காவல் துறையினர், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கண் கண்ணாடி மற்றும் கண்ணாடி டப்பாவில் இருந்த அடையாளங்களை கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில் கொலை செய்யப்பட்டவர், அலமேலு (50) என்பதும், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் என்பது தெரியவந்தது. மேலும், கொலை நடைபெற்ற ஏரியில் இருந்து கண்ணமங்கலம் வரை பொருத்தப் பட்டிருந்த 20 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டன. இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் ஆண் நபர் ஒருவர், கண்ணமங்கலம், புதுப்பேட்டை வழியாக கடந்த 18ம் தேதி காலை கொளத்தூர் நோக்கி சென்றதும், பின்னர் அன்றிரவு 8.45 மணியளவில், ஆண் நபர் மட்டும் தனியாக வந்ததும், அதன் பிறகு பேருந்தில் பயணித்து வேலூர் வழியாக சென்னைக்கு சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த நபரின் புகைப்படத்தை கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், ஆரணி வட்டம் ரெட்டிபாளையம் கிராமத்தில் வசிக்கும் தஞ்சன் (60) என்பது உறுதியானது. இவர், அலமேலு வீட்டின் அருகே போலி சாமியாராக வசித்து வந்துள்ளார். சென்னையில் இருந்து தனது தாயை பார்க்க படைவீடு கிராமத்துக்கு செல்வதற்காக, சொந்த ஊரான ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள முருகர் கோயில் மலையடிவாரத்தில் இருப்பது இன்று (செப்டம்பர் 20ம் தேதி) தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று, ரஞ்சனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, "ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டதால், தனது வீட்டின் அருகே வசிக்கும் தஞ்சனின் அறிமுகம் அலமேலுக்கு கிடைத்துள்ளது. ஆன்மிக குழுக்களுடனும், தனியாகவும் கோயில்களுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். பவுர்ணமி கிரிவலம் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளன. பணம் கொடுப்பதற்காக ரெட்டிபாளையம் கிராமத்துக்கு அலமேலுவை தஞ்சன் அழைத்து வந்ததாக அலமேலுவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்டுள்ள தஞ்சன், திருவண்ணாமலையில் உயிர் துறந்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், திருவண்ணாமலையில் தனது உயிர் பிரிய வேண்டும் என அலமேலு கூறியதாகவும், திருவண்ணாமலையில் கூட்டம் அதிகம் இருந்ததால், கொளத்தூர் ஏரி பகுதிக்கு அழைத்து சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறுகிறார். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடைபெற்றதா? அல்லது மூட நம்பிக்கையில் கொலை நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று காவல்துறையினர் கூறினார்.

x