கும்பகோணம்: கும்பகோணத்தில் நூற்றாண்டு பழமையான அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமையாசிரியை, 32 ஆசிரியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றார்கள்.
நேற்று பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகள் முடிந்து வழக்கம் போல் பள்ளியைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவிகள், அங்குள்ள 10ம் வகுப்பு, வகுப்பறைக்கு செல்லும் வராண்டாவில் உடைந்த வளையல் துண்டுகள் மற்றும் கீழே படிந்திருந்த ரத்தக் கறையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர், உடனே கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அங்கு வந்த போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் துப்புத் துலக்கினர். மோப்ப நாய், அந்த வராண்டாப் பகுதியில் இருந்து பள்ளி மைதானம் வழியாக போலீஸ் குடியிருப்பு வரை ஒடிச்சென்றது. இதையடுத்து, போலீஸார், அந்த ரத்தக் கறை மற்றும் உடைந்த வளையல் துண்டுகளின் மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், "பழமையான இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவரும், பாதுகாவலரும் கிடையாது. அதனால் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாகி வருகிறது. இதனால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இங்கு வசிப்பவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், இந்த பள்ளிக்குச் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்" என்றனர்.