போலீஸிடமிருந்து தப்பிக்க மேம்பாலத்தில் இருந்து குதித்த ரவுடி: படுகாயமடைந்து மரணம்


புது தில்லி: போலீஸார் கைது செய்ய முயன்றபோது, ​​அவர்களிடமிருந்து தப்பிக்க டிரான்ஸ்-யமுனா பகுதியில் உள்ள ஷாஹ்தரா மேம்பாலத்தில் இருந்து குதித்த ரவுடி படுகாயமடைந்து உயிரிழந்தார்.

டிரான்ஸ்-யமுனா பகுதியைச் சேர்ந்த ஜாகிர் என்கிற சோனு மீது 10 குற்ற வழக்குகள் உள்ளன. இவர் டெல்லியின் கிழக்குப் பகுதியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இர்ஃபான் என்கிற சேனுவால் வழிநடத்தப்படும் கும்பலைச் சேர்ந்தவர் ஆவார்.

நேற்று காலை 10.30 மணியளவில் ஒரு சொகுசு காரில் சென்று கொண்டிருந்த போது, ஷாஹ்தாரா மேம்பாலத்தில் அஃப்சர், நதீம், அபித் மற்றும் ஷோயப் ஆகிய நான்கு சந்தேக நபர்களுடன் சோனு பிடிபட்டார். போலீஸார் அவர்களை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, ​​ஜாகீர் அங்கிருந்த தப்பி ஓட முயன்றார். அப்போது அவர் மேம்பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.

அவர் கீழே குதித்தபோது, ​​மரத்தின் கிளையைப் பிடிக்க முயன்றார். ஆனால் அவரது கைகள் நழுவி சாலையில் விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை போலீஸார் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.

பிடிபட்டவர்கலிடம் இருந்து ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ஒன்றும், 7 ரவுண்டுகள் கொண்ட தோட்டாக்கள், இரண்டு 30 போர் பிஸ்டல்கள் மற்றும் மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

x