சென்னை: மும்பை சைபர் கிரைம் போலீஸ் என கூறி சென்னையில் 190 பேரிடம்132 கோடி பணம் பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிரந்தர வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள், முதியோரைக் குறிவைத்து இந்தமோசடிகள் நடந்துள்ளன.
வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் வைத்திருக்கும் முதியவர்கள், குறிப்பாக நிரந்தர வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள், தொழில் செய்பவர்களைக் குறி வைத்து கும்பல் ஒன்று சமீபகாலமாக மிரட்டி பணம் பறித்து வருகிறது.
அதாவது, அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பெட்டெக்ஸ், புளூடார்ட் கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல் அழைப்பு வரும். அதில், பேசுபவர் ``உங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு புலித்தோல், போதைப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், சிம்கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றும் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்துள்ளது’' எனக் கூறுவார்.
அல்லது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, ``உங்களது செல்போன் எண்ணைப் பயன்படுத்தி பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில், கோடிக்கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் (ஹவாலா) நடைபெற்றுள்ளது. எனவே, இதுதொடர்பாக மும்பை சைபர் க்ரைம் போலீஸார் அல்லது சிபிஐ போலீஸார் விசாரணை செய்வார்கள்'' எனக் கூறி இணைப்பை, மற்றொரு நபருக்கு ‘பார்வேர்டு’ செய்வார்.
போலீஸ் போல் சீருடை: தொடர்ந்து, எதிர்முனையில் காவல் துறை அதிகாரி போன்று ஒருவர் பேசுவார். அவர் ஸ்கைப் போன்ற சமூக வலைதள ஆப்பை செல்போனில் நம்மை பதிவிறக்கம் செய்ய வைத்து, அதன்மூலம் வீடியோ காலில் போலீஸ் போன்று சீருடை அணிந்து கொண்டு மிரட்டும் தொனியில் பேசுவார்.
நாம் சட்டவிரோத செயல் செய்வதுபோலவும், இல்லை என நிரூபிக்க நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை, ஆய்வு செய்வதற்காக அவர் கூறும் ஆர்பிஐ வங்கிக் கணக்கு (போலி வங்கிக் கணக்கு) அனுப்பும்படி கூறுவார். அதன்படி, அனுப்பி வைத்த பின்னர், எதிர் முனையில் பேசுபவரின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். பின்னர் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாது.
விழிப்புடன் இருக்க வேண்டும்: இதுபோன்ற மோசடி வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகைவைத்திருப்பவர்கள், அதிகளவுபணம் வைத்திருக்கும் முதியவர்களைக் குறி வைத்தே பெருமளவில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் மட்டும் இந்த வருடத்தில் இதுவரை 190 பேர் ரூ.132 கோடியை இழந்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். எனவே, இதுபோன்ற மோசடிகளில் ஏமாறாமல் விழிப்புடன் இருக்கும்படி, சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், இந்த மோசடி கும்பலைப் பிடிக்க கூடுதல் காவல் ஆணையர் ராதிகா, துணை ஆணையர் ஜெரினா பேகம், சைபர் கிரைம் ஏடிசி ஜீவானந்தம், உதவி ஆணையர்கள்கள் பால் ஸ்டீபன், காவியாதலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.