பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே கஞ்சா விற்ற 2 பேர் கைது: ஆந்திரா, பிஹாரை சேர்ந்தவர்கள்


கைது செய்யப்பட்ட ரோகித்குமார், ராஜவிக்ரம் ஆதித்யா.

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள தனியார்பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஆந்திரா, பிஹாரைச் சேர்ந்த இரு மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் வீடு எடுத்துத் தங்கியிருந்த ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜவிக்ரம் ஆதித்யா (20), பிஹார் மாநிலம் ஆரோரியாமாவட்டத்தைச் சேர்ந்த ரோகித்குமார்(21) ஆகியோரிடமிருந்து 500 கிராம் கஞ்சா, எடை இயந்திரம், இரு செல்போன்களை மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா புழக்கம் அதிகரிப்பு: இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து, தீவிர விசாரணை மேற்கொண்டோம். இதில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அங்கிருந்து கஞ்சா கொண்டுவந்து, இங்குள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேகத்துக்குரிய மாணவர்களை கண்காணித்து, நேற்று காலை இருவரைக் கைது செய்தோம். அவர்கள் இருவரும் தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். 4-ம் ஆண்டு பயின்று வருகின்றனர். பல்கலை. விடுதியில் தங்காமல், தனியாக வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்றனர்

x