சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகளை இட்ட வேலூர் இளைஞர் கைது


கவுதம்

திருச்சி: பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலும் சமூக வலைதளத்தில் பதிவுகளை இட்ட வேலூர் மாவட்ட இளைஞர் ஒருவரை திருச்சி மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர் பிரீத்தி, சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் இளைஞர் ஒருவர் பெண்கள் அணியும் உள்ளாடைகளை அணிந்து கொண்டு, திரைப்படப் பாடல்களை திருத்தி பாலியல் ரீதியாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி பல வீடியோக்களை அந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதைக் கண்டார்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்கள், குழந்தைகள் மத்தியில் பரவுவதால் அதை பார்க்கும் நபர்கள் பெண்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், கேலி, கிண்டலுக்கு ஆளாக்கும் நிலை ஏற்படுகிறது என்பதால் அந்த பதிவுகளை இட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி காவலர் பிரீத்தி பேட்டைவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம், மேல்பட்டி, கொத்தமாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த அ.கவுதம் (24) என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

x