பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!


பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள்

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் வெடிகுண்டு வெடித்த நிலையில், பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டல்

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள புரூக்ஃபீல்டில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி பட்டப்பகலில் அடுத்தடுத்த குண்டுகள் வெடித்தன. இதில் பத்து பேர படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பை நடத்திய குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூரு காவல் துறை, என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு

இந்த நிலையில் பெங்களூருவில் ஏராளமான வெடிபொருட்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பெல்லந்தூரில் உள்ள பிரக்ரியா பள்ளிக்கு எதிரே உள்ள காலி நிலத்தில் ஏராளமான ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர் மற்றும் சில வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. உழவு இயந்திரம் ஒன்றில் இந்த வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெல்லந்தூர் அருகே சிக்கநாயக்கனஹள்ளி வயலில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து பெல்லந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெடிபொருட்கள் பாறையை உடைப்பதற்காக பயன்படுத்தப்படுவது என்று கூறப்பட்டாலும், உரிமமின்றி சட்டவிரோதமாக குவிக்கப்பட்டிருந்தது எதற்காக என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெடிபொருட்களை வைத்தது யார் என போலீஸார் தேடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

x