திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு - ஆய்வக அறிக்கையை வெளியிட்டது ஆந்திர அரசு


அமராவதி: திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் இருப்பது பற்றிய ஆய்வக அறிக்கையை மேற்கோள் காட்டி ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக சாடியுள்ளார்.

குஜராத்தில் இயங்கும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு மற்றும் கற்றல் மையம் (CALF) ஆய்வகத்தின் ஜூலை மாத அறிக்கையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதை உறுதிப்படுத்தியது என ஆந்திர அரசு மேற்கோள் காட்டியது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியது.

முன்னதாக, அமராவதியில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டது. நெய்க்குப் பதிலாக விலங்குக் கொழுப்பைப் பயன்படுத்தினார்கள். தற்போது நெய் உள்ளிட்ட பொருட்கள் அதிக தரத்தில் பயன்படுத்தப்படுவதை தனது அரசாங்கம் உறுதி செய்துள்ளது. கோயிலில் வழங்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் தற்போது மேம்பட்ட தரத்தில் வழங்கப்படுகிறது.” என்று ஆவேசப்பட்டார்.

ஆந்திர முதல்வரின் குற்றச்சாட்டை மறுத்து திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் சுப்பாரெட்டி மற்றும் கருணாகர ரெட்டி ஆகியோர், “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்ததாக முதல்வர் கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அவரது குற்றச்சாட்டை ஏழுமலையான் கூட மன்னிக்க மாட்டார்.

வெள்ள பாதிப்பு மற்றும் பிரச்சினைகளை திசை திருப்பவே இதுபோன்ற புதிய பிரச்னையை அவர் கிளப்பியுள்ளார் சந்திரபாபு நாயுடு. அரசியல் ஆதாயத்திற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்குவார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்” என்று அவர்கள் கூறினர்.

x