சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் (ஆர்.ஏ.புரம்) பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு நேற்று காலை மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், இதுகுறித்து உடனடியாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். குறிப்பாக, வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது. நீண்ட நேர சோதனையின் முடிவில், வெடி குண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதையடுத்து, புரளியை கிளப்பும் நோக்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகே பள்ளி தரப்பினர், பொதுமக்கள், பெற்றோர் நிம்மதி அடைந்தனர். சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இதேபோன்று புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
அது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணைமேற்கொண்டுவரும் நிலையில் தற்போது ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.