பல்லாவரம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: பட்டதாரிகள் இருவர் கைது


பல்லாவரம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த பட்டதாரி இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, 10 போதை மாத்திரைகள், 5 போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், மல்லிமா நகர், அரசுப் பள்ளி அருகேயுள்ள காலி மைதானத்தில் இரண்டு இளைஞர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக சங்கர் நகர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீஸார், அந்த இரண்டு இளைஞர்களை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் பொழிச்சலூர், பிரேம் நகர், கக்கன்ஜி தெருவை சேர்ந்த ஆகாஷ் (29) மற்றும் பொழிச்சலூர், பிரேம் நகர், மல்லிகை தெருவைச் சேர்ந்த அஜய் (29) என்பது தெரிய வந்தது.

அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் ஒன்றரை கிலோ கஞ்சா, 10 போதை மாத்திரைகள், 5 போதை ஸ்டாம்புகள் ஆகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் எம்.காம் மற்றும் எம்பிஏ பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

x