கிளியின் கழுத்தை அழுத்திய கட்டி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!


மத்தியப் பிரதேசம்: சத்னா மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் 21 வயது கிளியின் கழுத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

முக்தியார் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சந்திரபன் விஸ்வகர்மா சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது வளர்ப்பு கிளியின் கழுத்தில் ஒரு கட்டியை கண்டார். அது படிப்படியாக அதிகரித்து, கிளி மிகவும் சிரமத்தை எதிர்கொண்டது. அதனால் சரியாக பேசவோ, உணவு உண்ணவோ முடியவில்லை.

இதையடுத்து சந்திரபன் சிகிச்சைக்காக சத்னா மாவட்ட கால்நடை மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டார். பரிசோதனைக்கு பின், கால்நடை மருத்துவர்கள், கட்டி இருப்பதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர்.

அதன்பிறகு, கால்நடை மருத்துவர்கள் கிளிக்கு சுமார் இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 20 கிராம் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

இதுகுறித்து பேசிய கால்நடை மருத்துவர் பாலேந்திர சிங், "இந்த அறுவை சிகிச்சை சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ந்தது. கிளியின் எடை 98 கிராம் மற்றும் கிளியில் இருந்து சுமார் 20 கிராம் கட்டி அகற்றப்பட்டது. மேலும் அந்த கட்டி பரிசோதனைக்காக ரேவா கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிளியின் தொண்டைப் பகுதியில் கட்டி இருந்ததால், இது கடினமான அறுவை சிகிச்சை. தற்போது அந்த கிளி பூரண நலமாக உள்ளது. கிளி இப்போது சரியாக உணவு உண்கிறது. பறவைகளில் கட்டி இருப்பது மாவட்டத்திலேயே இதுதான் முதல்முறை" என்று அவர் கூறினார்.

x