ராஜஸ்தான்: தௌசாவில் உள்ள பாண்டிகுய் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு அருகே உள்ள குழியில் சிக்கிய இரண்டு வயது சிறுமி நீரு குர்ஜார், 20 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டார். புதன்கிழமை குழிக்குள் விழுந்த அவள் இரவு முழுவதும் தொடர்ந்து பல முயற்சிகளுக்குப் பிறகு மீட்கப்பட்டார்.
பாண்டிகுயின் ஜோத்புரியா கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இரண்டு வயது சிறுமி நீரு குஜ்ஜார் 35 அடி ஆழமுள்ள குழியில் விழுந்தார். இதனையடுத்து இன்று அதிகாலை 2 மணி வரை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் போராடி சிறுமியை குழியிலிருந்து வெளியே எடுத்தனர்
சிறுமியை வெற்றிகரமாக உயிருடன் வெளியே எடுத்ததும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சயளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமி விழுந்த குழிக்கு அருகே 31 அடி ஆழமுள்ள குழியை மீட்புக் குழுவினர் தோண்டினர். அப்போது சிறுமியை நோக்கி 20 அடி நீள குழாய் செருகப்பட்டது. சிறுமிக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும், சிறுமியின் தாய் தனது மகளிடம் மைக் மூலம் பேசிக்கொண்டிருந்தார்.