திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற ஊராட்சி தலைவரின் கணவரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள சிறுவானூர் ஊராட்சி தலைவராக இருந்து வருபவர் பவானி. இவரின் கணவர் ரமேஷ். முன்னாள் ஊராட்சி தலைவர். ரமேஷ் தற்போது பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சிறுவானூர் ஊராட்சி பகுதியில் உள்ள சாலையோரங்களை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு வந்ததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் எளிதாக செல்ல முடியாமல் அவதியுற்று வந்தனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில், இன்று மாலை ஊராட்சி தலைவரின் கணவரான ரமேஷ், பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆக்கிரமிப்பாளர்கள், ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவ்வாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவரான வேலு, அரிவாளால் ரமேஷின் தலை மற்றும் கை பகுதிகளில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ரமேஷ், பொதுமக்களால் மீட்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, ரமேஷ், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.