கல்லப்பாடி காப்புக்காட்டில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்த முயன்றவர் கைது


கல்லப்பாடி காப்புக்காட்டில் செம்மர கட்டைகள் வெட்டி கடத்த முயன்றதாக குடியாத்தம் வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட முனிராஜ்.

குடியாத்தம்: குடியாத்தம் அருகேயுள்ள கல்லப்பாடி காப்புக்காட்டில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்த முயன்றவரை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லப்பாடி காப்புக்காட்டில் செம்மரங்கள் வளர்ந்துள்ளன. அங்குள்ள செம்மரங்கள் அவ்வப்பாது மர்ம நபர்களால் வெட்டி கடத்த முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே, கல்லப்பாடி காப்புக்காடு பகுதியில் குடியாத்தம் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்நிலையில், கல்லப்பாடி காப்புக்காட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் நுழைந்ததாக வனத்துறையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கல்லப்பாடி காப்புக்காட்டுக்கு உட்பட்ட முதலியார் ஏரி வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வெட்டப்பட்ட செம்மர கட்டைகளுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். வனத்துறையினர் வருவதைப் பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அவரை வனத்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த துரைமூலை கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் (45) என்று தெரியவந்தது.

அவர் வெட்டி வைத்திருந்த சுமார் 750 கிலோ எடையுள்ள 15 துண்டு செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. செம்மர கட்டைகள் வெட்டி கடத்த முயன்ற வழக்கில் முனிராஜை கைது செய்த வனத்துறையினர் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து தனியாக விசாரித்து வருகின்றனர்.