கல்லூரி மாணவிக்கு கத்திக் குத்து... பள்ளி மாணவன் வெறிச்செயல்!


மருத்துவமனை வாசல் முன்பாக உறவினர்கள்

கல்லூரி மாணவியை அவரது உறவுக்கார சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் மாணவி

திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே பரதேசிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மோனிஷா, ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை மோனிஷா வீடு திரும்பினார். இரவு சுமார் 8 மணியளவில் மோனிஷா வீட்டில் இருப்பதை அறிந்த சிறுவன் மோனிஷாவை, சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

அதை தடுக்க வந்த மோனிஷாவின் பாட்டியையும் சிறுவன் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினான். மோனிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மோனிஷா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே மோனிஷாவை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

வீட்டில் ரத்தம்

இது தொடர்பாக கந்திலி போலீஸார் சிறுவனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மோனிஷாவின் தம்பி உறவு முறை கொண்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் அடிக்கடி மோனிஷாவின் வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த ஒரு வாரத்துக்கு முன் மோனிஷாவின் வீட்டிற்கு வந்த சிறுவன் வீட்டில் இருந்த செல்போனை திருட முயன்ற போது மோனிஷா அதை பார்த்து விட்டு, சிறுவனைக் கண்டித்துள்ளார்.

அத்துடன் சிறுவனின் பெற்றோரிடமும் இதுகுறித்து புகார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் மோனிஷாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்தார். அவர் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்கு சென்று சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான். அப்போது அவரை தடுக்க வந்த மோனிஷாவின் பாட்டியையும் சிறுவன் குத்திவிட்டு தப்பி சென்றதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

x