அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில், செப்.14-ம் தேதி இரவு தளவாய் காவல் நிலைய காவலர் தமிழ்ச்செல்வன்(43), ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வெங்கடேசன்(35) ஆகியோர் சன்னாசிநல்லூர்- அங்கனூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவை மறித்த போது, ஆட்டோவை நிறுத்துவது போல வந்து, இருவர் மீதும் மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் சுமை ஆட்டோ சென்று விட்டது. இதில், தமிழ்ச்செல்வனுக்கு எலும்புமுறிவும், வெங்கடேசனுக்கு காயமும் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து தளவாய் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(23), வினோத்குமார்(30), வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்த சரண்(19) ஆகியோர் சுமை ஆட்டோவில் மணல் கடத்தி சென்றபோது, போலீஸார் மறித்ததால், அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் நேற்று 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.