அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்(51). ராணுவ வீரரான இவருக்கும், இவரது மனைவி பத்மாவதிக்கும் இடையே கடந்த செப்.15-ம் தேதியன்று இரவு தகராறு ஏற்பட்டபோது, துப்பாக்கியை எடுத்து காண்பித்து, சுட்டுவிடுவதாக பத்மாவதியை செல்வராஜ் மிரட்டியுள்ளார்.
இதில், அச்சத்தில் பத்மாவதி அலறியதால், அக்கம்பக்கத்தினர் சென்று செல்வராஜிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தனர். அப்போது, அனைவரையும் மிரட்டும் நோக்கில், வானத்தை நோக்கி துப்பாக்கியால் செல்வராஜ் சுட்டுள்ளார்.
இது குறித்த தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) நடராஜன் தலைமையிலான போலீஸார், செல்வராஜ் வீட்டுக்குச் சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.