ராஜஸ்தானின் கல்வி நகரமான கோட்டாவில் மாணவர்கள் தற்கொலைகள் தொடர்கின்றன. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் 2 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
ராஜஸ்தானிலுள்ள கோட்டா நகரில் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத்தேர்தளுக்கானத் தனியார் பயிற்சி மையங்கள் அதிகமாக உள்ளன. தமது பத்தாம் வகுப்புகளுக்கு பின் இவற்றில் தங்கி பயில நாடு முழுவதிலுமிருந்து மாணவர்கள் வருகிறார்கள். இவர்கள் மூலம் கோட்டாவிற்கு மட்டும் வருடம் ஒன்றுக்கு சுமார் 5,000 கோடி வருமானம் பலவகைகளில் கிடைக்கிறது. இந்த மாணவர்கள், 9 முதல் பிளஸ்2 வரையிலான வகுப்புகள் பயில்வதுடன், அதன் பிறகுக்கான நுழைவுத்தேர்வுகளுக்கும் பயிற்சி பெறுகின்றனர். இதனால், இம்மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் தேர்வுகளை நடத்தி கடுமையானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால், அப்பயிற்சி பெறுவதில் சிரமப்படும் வளர்இளம் பருவத்தின் மாணவர்களில் தற்கொலை முடிவை எடுப்பது அதிகரித்து விட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டாவின் ஜவகர்நகரிலுள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தின் ஆறாவது தளத்திலிருந்து ஒரு மாணவர் கீழே குதித்து விட்டார். தற்கொலை முயற்சிக்காக இதை செய்தவர் மகராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அவிஷ்கர் சம்பாஜி காஸ்லே(17) எனத் தெரிந்துள்ளது. இவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தின் அடுத்த 5 மணி நேரத்தில் மற்றொரு மாணவர் தற்கொலை செய்துள்ளார்.
கோட்டாவின் குஹாடி காவல்நிலையப் பகுதியில் தம் உறவினர் மூவருடன் தங்கியபடி பயிற்சி பெற்று வந்தார், ஆதர்ஷ் ராஜ்(18). இவர் பிஹாரின் ரோத்தாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர். ஆதர்ஷின் சகோதரியும் இவருடன் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். மாலை 7.30 மணிக்கு வீடு திரும்பிய சகோதரி ஆதர்ஷின் அறையை தட்டியுள்ளார். நீண்டநேரமாக திறக்காமல் போக அக்கதவை உடைத்துள்ளனர். அந்த அறையில் தூக்கிலிட்டு தொங்கிய ஆதர்ஷின் உயிர் பிரிந்திருந்தது.
இது குறித்து கோட்டாவின் டிஎஸ்பியான தரம்வீர் சிங் கூறும்போது, ‘தமது பயிற்சிக்கானத் தேர்வை எழுதிய காஸ்லே, நேராக சென்று குதித்துள்ளார். இவர், கடந்த 3 வருடங்களாக இங்கு தங்கி நீட் மருத்துவ நுழைவுத்தேர்விற்கானப் பயிற்சி பெற்று வந்தார். ஜிக்காக கடந்த ஒரு வருடமாக இங்கு தங்கிய ஆதர்ஷ், தனது அறையிலேயே தூக்கிலிட்டுக் கொண்டார். இந்த மாதத்தில் மட்டும் இதுபோல் ஐந்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.’ எனத் தெரிவித்தார்.
இதுபோல், தம் பயிற்சிகளின் மீது நம்பிக்கை இழந்தும், தோல்வி அடைந்தும் கோட்டாவில் தொடர்ந்து பல தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவரையும் இந்த வருடம் மட்டும் 23 மாணவர்கள் பலியாகி உள்ளதாக காவல்நிலைங்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022ல் 15, 2019ல் 18, 2018ல் 20, 2017ல் 7, 2016ல் 17 மற்றும் 2015ல் 18 எனத் தொடர்ந்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த சமீபத்தில் அனைத்து மின்விசிறிகளும், அதிக எடைகளை தாங்க முடியாத வகையில் ஸ்பிரிங்குகளுடன் பொறுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது கடைசியாக நடந்த சம்பவத்திற்கு பின் கோட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அடுத்த 2 மாதங்களுக்கு எந்த பயிற்சி நிலையமும் பயிற்சித் தேர்வுகளை நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.