பரனூர் சுங்கச்சாவடி உடைப்பு: ஜவாஹருல்லா உட்பட 300 பேர் மீது வழக்குப் பதிவு


செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மமக தலைவரும் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹருல்லா உள்ளிட்ட 300-பேர் மீது 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாகத் செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள சுங்கச்சாவடியில் மமக மாநில தலைவர் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹருல்லா, மாநில துணை பொதுச்செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான யாகூப், உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுங்கச் சாவடியிருந்த 4, 5 மற்றும் 6ம் எண் கொண்ட 3 பூத்துகளில் இருந்த கட்டணம் வசூலிக்கப்படும் மையத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். இதனையடுத்து அக்கட்சியினர் போலீஸ் வேன் மீது தாக்குதல் நடத்தி வாகனத்தை சேதப்படுத்தி முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், இது குறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீஸார், போராட்டம் செய்ய அனுமதி இல்லாமல் கூடியது, சுங்கச் சாவடியை சேதப்படுத்தியது என 2 பிரிவுகளில் மமக தலைவரும் எம்எல்ஏ-வான ஜவாஹருல்லா உட்பட 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக் கோட்டை ஆகிய 4 சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டன.

இவ்வாறு காலாவதியான சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது போன்று கட்டணம் வசூலிக்கக் கூடாது. பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த 4 சுங்கச்சாவடிகளையும் அகற்றக் கோரி மத்திய அரசுக்கு மாநில அரசு தரப்பில் தொடர்ந்து கடிதம் எழுதப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x