‘கூல் லிப்’புக்கு தடை கோரிய வழக்கு: ஹரியாணா, கர்நாடகா நிறுவனங்கள் எதிர்மனுதாரராக சேர்ப்பு


மதுரை: ‘கூல் லிப்’ எனும் போதை பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் ஹரியாணா கர்நாடக மாநிலங்களை சேர்ந்த கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போதை பொருள் வழக்குகளில் கைதானவர்கள், தலைமறைவாக இருப்பவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, "தமிழகத்தில் கூல் லிப் எனும் போதை பொருளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் கூல் லிப் கிடைக்கிறது. இதை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜிஎஸ்டி மற்றும் வரிகள் வசூலிக்கப்படுகின்றன. கூல் லிப் போதை பொருளால் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து அதற்கு இந்தியா முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது? இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் ஹரியாணா மாநிலம் சோனேபேட் பகுதியைச் சேர்ந்த தேஜ்ராம் தரம்பால் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்த விதரத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் தும்குரு அந்தரசனஹள்ளி இண்டஸ்ட்ரியல் ஏரியாவைச் சேர்ந்த வி.ஆர்.ஜி ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

x