கடத்தல் பொருட்களை வாங்க படகில் எல்லை தாண்டிய இலங்கை நபர்கள் மூவர் கைது: தொண்டி அருகே பரபரப்பு


ராமேசுவரம்: கடத்தல் பொருட்களை வாங்குவதற்காக படகில் எல்லை தாண்டி வந்த 3 இலங்கை நபர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து 20 நாட்டிகல் தொலைவில் கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்தது. அப்போது இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த இலங்கையை சேர்ந்த ஒரு ஃபைபர் படகினை சுற்றி வளைத்தனர். அப்படகில் இருந்த மூன்று இலங்கையை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு இன்று காலை மெரைன் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் மூவரும் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் தாலையடி பகுதியைச் சேர்ந்த பால ரமேஷ் (37) குமார் (44), நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த நிரோசன் (34) என்று தெரியவந்தது. இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணல் மேல்குடி பகுதியைச் சேர்ந்த நபர்களிடமிருந்து நடுக்கடலில் வைத்து சட்டவிரோதமாக கடத்தல் பொருட்களை வாங்கிச் செல்ல எல்லை தாண்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவர் மீதும் மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு மூவரும் சென்னை புழல் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர்.

x