மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், செவிலியரை தாக்கியவர் கைது!


கோப்புப் படம்

மதுரை: உடல்நிலை பாதித்த தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் செவிலியரை தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் கோச்சடை பகுதி நடராஜ் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சரவணன் (25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கும், இவரது தந்தைக்கும் நேற்று இரவு வீட்டில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணேசன் காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சிறிது நேரத்தில் அங்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது.

கணேசனை ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, சரவணன் தனது தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூடாது எனத் தடுத்துள்ளார். அத்துடன் ஆம்புலன்ஸ் வேனையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளார். மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண்குமார், செவிலியர் வேதா ஆகியோரையும் தாக்கியுள்ளார்.

இருப்பினும், மாற்று வாகனத்தில் கணேசனை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் சரவணனை இன்று கைது செய்தனர்.

x