புகாரளிக்க சென்ற ராணுவ மேஜர் மீது தாக்குதல்; பெண் தோழிக்கு துன்புறுத்தல் - குற்றச்சாட்டில் சிக்கிய ஒடிசா போலீஸார்


புவனேஸ்வர்: பாரத்பூர் காவல் நிலையத்தில் ராணுவ மேஜரும் அவரது வருங்கால மனைவியும் காவலில் வைத்து சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஒடிசா காவல்துறை தலைமை இயக்குனர் இந்த விவகாரத்தில் முழுமையான பாரபட்சமற்ற விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கு வங்கத்தில் பணிபுரியும் மேஜர் குர்வன்ஷ் சிங் மற்றும் அவரது வருங்கால மனைவி அங்கிதா பிரதான் ஆகியோர், தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக புகாரளிக்க பாரத்பூர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கே பணியில் போலீஸ் அதிகாரிகள் இவர்களை தாக்கி துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரின்படி, ‘ராணுவ மேஜர் மற்றும் அவரின் வருங்கால மனைவி அளித்த புகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுத்துவிட்டனர். மேலும், அவர்கள் எழுத்துப்பூர்வ புகாரை வலியுறுத்தினர். இதனால் மேஜர் தனது உயர் அதிகாரிகளிடம் பேசுமாறு கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிதாவை ஒரு பெண் அதிகாரி மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று அவரின் ஆடைகளை கலைந்து துன்புறுத்தப்பட்டதாகவும், தாக்கப்பட்டார். இராணுவ அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து மேஜர் குர்வன்ஷ் சிங் மற்றும் அங்கிதா 10 மணி நேர துன்புறுத்தலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாரத்பூர் போலீஸார், தம்பதியினர் குடிபோதையில் இருந்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். துணை போலீஸ் கமிஷனர் பிரதீக் சிங் கூறுகையில், ‘ அவர்கள் பணியில் இருந்த ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டனர். மேலும் அங்கிதா ஒரு பெண் அதிகாரியை தாக்கி பொருட்களை சேதப்படுத்தினார். தம்பதியரின் காரில் இரண்டு மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மதுஅருந்தியதற்காக மூச்சுப் பரிசோதனை செய்ய மறுத்துவிட்டனர்’ எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஒடிசா டிஜிபி இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

x