செக் பவுன்ஸான வழக்கில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ வேதபிரகாஷ் சோலங்கிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து கோட்புட்லி பெஹ்ரர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு மோஹர் சிங் யாதவ் என்பவர், சக்சு தொகுதி எம்எல்ஏவான வேதபிரகாஷ் சோலங்கியிடம் மனை வாங்கி தரும்படி ரூ.35 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ சோலங்கி, மோஹர் சிங் யாதவுக்கு மனை வாங்கித்தரவில்லை.
இதையடுத்து அவரது தொகையைத் திரும்பிக் கொடுக்கும் விதமாக ரூ.35 லட்சத்துக்கு காசோலை வழங்கியதாகவும், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணமின்றி திரும்பிவிட்டதாகவும் மோஹர் சிங் யாதவ் குற்றம்சாட்டி, கூடுதல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் - 3ல் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், எம்எல்ஏ வேதபிரகாஷ் சோலங்கி அபராதத்துடன் ரூ.55 லட்சம் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டதாகவும், அந்த பணத்தை செலுத்தாததால் எம்எல்ஏ சோலங்கிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்ததாகவும் மோஹர் சிங் யாதவின் வழக்கறிஞர் பூபேந்திர குமார் பிரஜாபத் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டின் ஆதரவாளரான எம்எல்ஏ வேதபிரகாஷ் சோலங்கி, இதுகுறித்து கூறுகையில்," இந்த தீர்ப்புக்கு எதிராக நான் மேல் முறையீடு செய்வேன். மோஹர் சிங் யாதவ் யாரென்றே எனக்கு தெரியாது. எனது காசோலையை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யப்படுகிறது. இதுகுறித்து நான் ஏற்கேனவே புகார் அளித்துள்ளேன்' என்றார்.
ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்றதால் எம்எல்ஏ சோலங்கி மீதான கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டுள்ளது.