மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடித்து வைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான் குளத்தைச் சேர்ந்தவர்கள் வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ். இவர்கள் செல்போன் கடை வைத்திருந்தனர். கரோனா காலத்தில் கரோனா கட்டுப்பாட்டை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகனை சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடக் கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், ”இந்த வழக்கில் இன்னும் ஒரு சாட்சி மட்டும் விசாரிக்கப்பட வேண்டியதுள்ளது. இதனால் விசாரணை விரைவில் முடிந்து விடும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், "ஏற்கெனவே வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால், தொடர்ந்து கால அவகாசம் கோரப்பட்டு விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது. எனவே விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து, “சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை விசாரணை நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.