கடன் தொல்லையில் பேக்கரி ஓனர் தற்கொலை: மதுரையில் கந்துவட்டி சட்டத்தில் இருவர் கைது


மதுரை: மேலூர் அருகே கடன் தொல்லையால் பேக்கரி உரிமையாளர் தற்கொல செய்து கொண்டார். இது தொடர்பாக கந்து வட்டி சட்டத்தில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மேலூர் அருகிலுள்ள கத்தப்பட்டியை சேர்ந்தவர் ராஜா(45) அப்பகுதியில் பேக்கரி நடத்தி வந்தார். தொழிலை மேலும், விரிவுபடுத்த பணம் இல்லாததால், தெரிந்த நபர்கள் மூலம் கடன் வாங்கினார். மேலும், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரிடமும் ராஜா, ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இப்பணத்தை திரும்ப செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

சில நாளுக்கு முன் வினோத் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் ராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் மனமுடைந்து காணப்பட்ட தம்பதியினர் செய்வதறியாது தவித்தனர். ஏற்கெனவே கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டதால் நாளுக்கு நாள் தொல்லை அவர்களுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் குடும்பத்தினருடன் தற்கொலை செய்யலாம் என, திட்டமிட்டபோது, மகள்கள் இருவரும் மறுத்த நிலையில், கணவனும், மனைவியும் கடந்த செப்.,11ஆம் தேதி விஷம் குடித்தனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிந்தார். அவரது மனைவி சிகிச்சையில் உள்ளார். இது குறித்து மேலூர் போலீஸார் உத்தங்குடியைச் சேர்ந்த சிவா (27), அலங்காநல்லூர் வினோத்(23) ஆகியோர் மீது கந்துவட்டி, தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் வழக்குபதிந்து இருவரையும் கைது செய்தனர். தற்கொலைக்கு முன்பாக ராஜா 2 பக்கத்தில் எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

x