மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டதால் காயமடைந்துள்ளதாக மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்றிரவு வீட்டில் தவறி விழுந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் வெளியான புகைப்படங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிகிச்சைக்குப் பின்னர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பினார். அவருக்கு 3 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மம்தா பானர்ஜி பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டதில் காயமடைந்ததாக மருத்துவர்கள் கூறிய தகவல் மேலும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி சிகிச்சை பெற்ற கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை இயக்குநர் மணிமோய் பந்தோபாத்யாய் கூறுகையில், "முதல்வர் மம்தா பானர்ஜி, வீட்டில் பின்னால் இருந்து தள்ளப்பட்டு விழுந்ததில், காயமடைந்த தகவலின் பேரில் இரவு 7.30 மணியளவில் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” எனத் தெரிவித்தார்.
இதேபோல், போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம், தான் பின்னால் இருந்து தள்ளப்பட்டதாக மம்தா கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் அம்மாநில போலீஸார் இது தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. ஆனால் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே மேற்கு வங்க மாநில அரசு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது. மூத்த மருத்துவர்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் முதல்வர் நன்றாகத் தூங்கினார். இன்று காலை அவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.
மம்தா பானர்ஜி பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டதில் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.