காவல்நிலையத்தில் குடிபோதையில் இருந்த 3 போலீசார் கைது: மதுவிலக்கு அமலில் உள்ள பிஹாரில் அதிர்ச்சி!


பாபுவா: பிஹார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் குடிபோதையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று போலீஸார் கைது செய்யப்பட்டனர்.

சோன்ஹான் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் குடிபோதையில் இருப்பதாக எஸ்பி அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து பாபுவா எஸ்.எச்.ஓ. முகேஷ் குமார் தலைமையிலான குழு சோன்ஹான் காவல் நிலையத்திற்கு வந்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் இரண்டு காவலர்களான சந்திரஜீத் மற்றும் அம்ரேந்திர குமார் ஆகியோர் குடிபோதையில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். மற்றொரு வெளிநபர் சோனு குமாரும் அங்கே மது அருந்தியிருந்தார். இதனையடுத்து உடனடியாக அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பேசிய கைமூர் எஸ்.பியான லலித் மோகன் சர்மா, இந்த விவகாரத்தில் 3 போலீஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் லலித் மோகன் தெரிவித்தார்.

பிஹாரில் 2016 ஏப்ரலில் மதுபானம் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்து மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x