கல்லணைக் கால்வாயில் குளித்த சிறுமி உயிரிழப்பு; காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி - திருச்சி அருகே பரிதாபம்


திருச்சி: கிளியூர் கல்லணைக் கால்வாயில் குளித்தபோது சிறுமி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் 50 கி.மீ நீரில் இழுத்துச் செல்லப்பட்டு தஞ்சை மாவட்டம் காசாநாட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). பெல் ஊழியரான இவரது மனைவி தனலட்சுமி (38). இவர்களுக்கு இரண்டு மகள்கள் இந்நிலையில் சுரேஷ் தனது திருமண நாளான நேற்று தனது மகள்களான கிருத்திகா (13), யாஷிகா (6) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு கிளியூர் பகுதியில் உள்ள கல்லணைக் கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார். கிருத்திகா கரையில் அமர்ந்திருக்க. யாஷிகா மட்டும் திடீரென ஆற்றுக்குள் இறங்கினார்.

அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் யாஷிகா நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து பதறிய சுரேஷ், மகளைக் காப்பாற்ற ஆற்றுக்குள் குதித்தார். ஆனால் இருவரும் கரை திரும்பவில்லை. இதைப் பார்த்த கிருத்திகா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்க முயன்றனர். யாஷிகாவை மட்டும் மீட்டு பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருவெறும்பூர் போலீஸார் கிராம மக்கள் உதவியுடன் சுரேஷின் உடலை தேடினர். இதற்காக கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறப்பும் நிறுத்தப்பட்டது. நேற்று இரவு வரை தேடியும் சுரேஷின் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் 50 கி.மீ., தொலைவில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் காசாநாடு அருகே கோவிலுர் அருகே சுரேஷின் உடல் இன்று காலை கரை ஒதுங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீஸார், சுரேஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் மதியத்துக்கு மேல் சுரேஷ் உடலை பத்தாளப்பேட்டைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்த மகள் யாஷிகா, தந்தை சுரேஷ் ஆகியோரது இறுதிச் சடங்குகள் ஒரே சமயத்தில் நடந்தது. இது அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x