பெங்களூருவைக் கலக்கிய குழந்தைக் கடத்தும் கும்பல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் கைது!


குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள்.

பெங்களூருவில் குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களுருவில் குழந்தை கடத்தல் கும்பலைப் பிடிக்க மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ரம்யா என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே மகாலட்சுமி, ராதா, சுஹாசினி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

நவம்பர் 24-ம் தேதியன்று மேற்கு பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் குழந்தை இல்லாத தம்பதிக்கு பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க இருந்த நிலையில் மூன்று பெண்கள், கார் ஓட்டுநர் பிடிபட்டனர்.

பெங்களூருவில் கைது செய்யப்பட்டவர்கள்

குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மகாலட்சுமி என்பவர் மட்டும் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

இந்த குழந்தைக் கடத்தல் வழக்கில் சில மருத்துவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட பெண்கள் பலர், சோதனைக் கருத்தரிப்பிற்கான முகவர்களாக பணிபுரிந்துள்னர். வாடகைத்தாய் சட்டத்தின் விதிகள் கடுமையாகப்பட்டதால், அவர்கள் வேலையில் இருந்து விலகியுள்ளனர். இதன் பின் இவர்கள் குழந்தைகள் கடத்தும் கும்பலாக மாறியுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x