ஈபிஎஸ் மீது ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!


எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஆர்.எஸ்.பாரதி

கடந்த 2016-2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை துறை இலாகாவை தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி மீது ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை 2018-ல் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு மட்டுமே கொடுத்தது, வண்டலூர் - வாலாஜா சாலை 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டதில் முறைகேடு உள்ளிட்டவை அந்த வழக்கில் புகார்களாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன.

உச்ச நீதிமன்றம்

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. அதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தவே, எதிர்க்கட்சிகள் வழக்கைச் சந்திப்பது என்பது நாடு முழுவதும் நடந்து வரக்கூடிய ஒன்று தான். ஆளுங்கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக மாறியதற்கு பிறகு அவர்கள் ஆளும் போது என்னென்ன முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்பதை அலசி ஆராய்வது என்பது புதிதாக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் அடிப்படை கடமையாக உள்ளது.

அதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என வாதிட்டார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் இருந்து அரசியல் விவகாரங்களை தள்ளி வையுங்கள் என அறிவுறுத்தினர். மேலும் நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள் என்றும், ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளைச் சந்திப்பதில்லை எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.

ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நீதிபதி பெல்லா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

x