பூந்தமல்லி: பூந்தமல்லியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபரை இன்று போலீஸார் கைது செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக பூந்தமல்லி போலீஸாருக்கு கடந்த மாதம் 27-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பூந்தமல்லி போலீஸார், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி, பாரிவாக்கம் சிக்னல் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த கண்டெயனர் லாரியில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, சுமார் 10.9 டன் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டது ’’ தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி போலீஸார், அந்த புகையிலை பொருட்கள் மற்றும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்ததோடு, கண்டெய்னர் லாரி ஓட்டுநர் விக்னேஷை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர், காஞ்சிபுரம் மாவட்டம், அயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த செந்தில் என்கிற கனகலிங்கம் (38) என்பவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
செந்தில், கடந்த 6-ம் தேதி திருமுல்லைவாயில் காவல் நிலைய எல்லையில் 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கு, கடந்த மாதம் 22-ம் தேதி பூந்தமல்லி காவல் நிலைய எல்லையில், 352 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கு ஆகியவற்றிலும் தொடர்புடைய முக்கிய நபர் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
ஆகவே, தலைமறைவாக இருந்து வந்த செந்திலை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று பூந்தமல்லி அரசு மருத்துவமனை அருகே செந்திலை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
செந்திலிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், “செந்தில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை நீண்ட நாட்களாக பெங்களூருவில் இருந்து லாரிகள் மூலமாக தமிழகத்துக்கு கடத்தி வந்து, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்துவந்ததும், அவர் மீது பல்வேறு புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதும்’’ தெரிய வந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.